நெல்லை மாவட்டத்தில் 654 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

தினமணி  தினமணி

திருநெல்வேலி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 110 சிறிய விநாயகர் உள்பட 654 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் இருந்தே விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.

திருநெல்வேலி சந்திப்பில் 4, பாளையங்கோட்டைப் பகுதியில் 18, பேட்டையில் 9, தச்சநல்லூரில் 2, மேலப்பாளையத்தில் 2, திருநெல்வேலி நகரில் 20 சிலைகள் உள்பட மாநகரப் பகுதியில் 55 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.

திருநெல்வேலி நகரம் பாட்டப்பத்து பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சிலை திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வைக்கப்பட்டது. சிலையை அங்கிருந்து அகற்றியதற்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலப்பாளையம் குறிச்சியில் 11 அடி உயரமுள்ள விநாயகர் சிலை, 110 சிறிய விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டன. குறிச்சி அருள்மிகு சொக்கநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகளும், இரவில் கோலப்போட்டிகளும்  நடைபெற்றன. மாநகரப் பகுதியில் 110 சிறிய விநாயகர் உள்பட 165 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், இம்மாவட்டத்தில் கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், அரியநாயகிபுரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு, வள்ளியூர், ராதாபுரம், ஆழ்வார்குறி்ச்சி, கடையம், தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்பட புளியங்குடி, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதியில் 489 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையொட்டி கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பாஜக, இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

மூலக்கதை