கிராமங்கள் இழந்த விளையாட்டு கலைகளை மீட்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

தினமணி  தினமணி

கிராமங்கள் இழந்த விளையாட்டுக் கலைகளை மீட்க வேண்டும் என ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளர்.

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் சார்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் கிராமங்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் "ஈஷா கிராமோத்சவம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 880 அணிகளைச் சேர்ந்த 10,360 விளையாட்டு வீரர்கள் பல்வேறு கட்டமாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனர்.

இதையடுத்து, கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமோத்சவம் நிறைவு விழாவில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொரு வீரரும் அவர் விளையாடும் விளையாட்டின் மீது பற்று கொள்வார். வெற்றி மூலம் கிடைக்கும் தங்கம், வெள்ளியை விரும்புவார்கள். அதன்மூலம் மக்களிடம் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதே காரணம்.

ஆனால், வெற்றியைத் தாண்டி விளையாட்டில் ஈடுபடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டு, கலைகள் நிறைந்த தேசமாக ஒரு காலத்தில் இந்தியா இருந்து வந்தது. ஆனால்,கடந்த சில தலைமுறைகளாக இந்தப் பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் அழியத் தொடங்கின. வறுமை, தொழில், மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் போன்ற காரணங்களால் அந்த விளையாட்டுக் கலைகள் படிப்படியாக அழியத் தொடங்கின.

எனவே, கிராமப்புறங்களில் அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுக் கலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் பேசியதாவது:

கிராமப்புற மக்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். கிராமத்தில் பிறந்து விளையாட்டில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றேன். ஆனால், எவ்வித ஆதரவும், பயிற்சியாளரும் இல்லாமல் என்னுடைய முழுத் திறமையை நம்பியே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன்.

எனது வெற்றிக்குப் பின் பல தரப்பினரிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. அதன் பிறகே போட்டிகளில் தோல்வி அடையத் தொடங்கினேன். எவ்வித ஆதரவுமின்றி முழுத் திறமையுடன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது மட்டும் உண்மையான வெற்றி ஆகும் என்றார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி: ஒருவர் விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமாக மட்டுமே உடல் தகுதியைப் பெற முடியும். விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது மட்டுமே இலக்கு அல்ல. விளையாட்டு என்பது கற்றல்முறை ஆகும். அதன்மூலமாக நாட்டு மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்றார்.

இதைத் தொடர்ந்து கொடிசியாவில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கொடிசியா மைதானத்தில் கிராமிய உணவுத் திருவிழா, சிலம்பாட்டம், ஜம்பை மேளம், ஒயிலாட்டம், கணியன் கூத்து உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

மூலக்கதை