பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைவாக இருத்தல் அவசியம்: ஜோதிராதித்யா சிந்தியா

தினமணி  தினமணி

பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) விகிதம் இருத்தல் அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி வரி விகிதம் இருத்தல் அவசியமாகும். அப்படி இல்லாமல், ஜிஎஸ்டி வரி விதிகம் உயர்வாக இருந்தால், பாமர மக்களின் சுமையை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். இதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

பிற வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற வரி விதிப்பின் விகிதம், 16 சதவீதம் மற்றும் 16.5 சதவீதமாக உள்ளது. இதை விட அதிகமாக வரி நமது நாட்டில் விதித்தால், தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் ஜோதிராதித்யா சிந்தியா.

நாடு முழுவதும் தற்போது அமலில் இருக்கும் பல்வேறு மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு, ஜிஎஸ்டி வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசமைப்புச் சட்ட மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, அரசமைப்புச் சட்ட மசோதா என்பதால், நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதி மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும். இதையடுத்து, மாநிலங்களின் ஒப்புதலுக்கு விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 17 மாநில சட்டப் பேரவைகள் தங்களது ஒப்புதலை ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதாவுக்கு அளித்தன. எனவே, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்ததும், ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக விவாதிக்க குழுவை மத்திய அரசு அமைக்கும். அந்த குழு கூடி, வரி விதிப்பு விகிதம் உள்ளிட்டவைகளை முடிவு செய்யும்.

மூலக்கதை