உ.பி.: பாஜக, சமாஜவாதி மீது மாயாவதி தாக்கு

தினமணி  தினமணி
உ.பி.: பாஜக, சமாஜவாதி மீது மாயாவதி தாக்கு

பகுஜன் சமாஜ் கட்சி இக்கட்டான சூழலில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சமாஜவாதி, பாஜக ஆகிய கட்சிகள் முயன்று வருகின்றன என்று மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்தால் அதிருப்தி அடைந்த சிலர், பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு விலகிச் சென்றனர். எங்கள் கட்சி சார்பில் போட்டியிட பணம் வாங்கப்படுவதாக அவர்கள் தற்போது குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து எங்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த சமாஜவாதி, பாஜக ஆகிய கட்சிகள் முயற்சி செய்து வருகிறது.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மற்ற கட்சிகளைக் காட்டிலும் மிக வேகமாக நாங்கள் தயாராகி வருகிறோம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் 3-ஆவது இடத்தையே பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதில், உண்மையில்லை. பகுஜன் சமாஜ் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெறும் என்று மாயாவதி தெரிவித்தார்.

முன்னதாக, சுவாமி பிரசாத் மௌரியா, ஆர்.கே.சௌதரி, பிரஜேஷ் பாடக் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அண்மையில் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை