அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு

தினமணி  தினமணி
அனைத்துக் கட்சிக் குழுவினரை சந்திக்க பிரிவினைவாதிகள் மறுப்பு

காஷ்மீர் பிரிவினைவாதிகளைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் முயற்சி மேற்கொண்டனர். எனினும், அவர்களைச் சந்திக்க பிரிவினைவாதிகள் மறுத்து விட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த மாதம் 8ஆம் தேதி ஹிஸ்புஸ் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதைக் கண்டித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் 50 தினங்களுக்கும் மேல் வன்முறை நிறைந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் இதுவரை 71 பேர் உயிரிழந்து விட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ராஜ்நாத் சிங் தலைமையில் 26 எம்.பி.க்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழுவினர் இரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகர் சென்றடைந்தனர். அங்குள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச கருத்தரங்கு மையத்தில் முதல்வர் மெஹபூபா முஃப்தியை அவர்கள் சந்தித்துப் பேசினர்.

பிரிவினைவாதிகளை நோக்கி...: இதனிடையே, அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களான சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயப்பிரகாஷ் நாராயண் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) ஆகியோர் தனியாகச் சென்று பிரிவினைவாதத் தலைவர்களைச் சந்திக்க முயற்சித்தனர். முதலில் அவர்கள் ஸ்ரீநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானியின் இல்லத்துக்குச் சென்றனர். எனினும், எம்.பி.க்களைச் சந்திக்க கிலானி மறுத்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து, ஹுமாமா பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜேகேஎல்எஃப் அமைப்பின் தலைவர் யாசீன் மாலிக்கைச் சந்திக்க இந்த எம்.பி.க்கள் சென்றனர். தாம் தில்லி வரும்போது அவர்களைச் சந்திப்பதாக அவர் கூறிவிட்டார். அதன் பின் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்டைச் சந்திக்க எம்.பி.க்கள் சென்றனர். அவர்களை அவர் வரவேற்றபோதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதுதவிர, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி.யான அஸாதுதீன் ஒவைஸி தனியாகச் சென்று, ஹுரியத் அமைப்பின் மிதவாதத் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபரூக்கைச் சந்திக்க முயன்றார். அவரை உமர் ஃபரூக் வரவேற்றபோதிலும், பேச்சுவார்த்தை நடத்த மறுத்து விட்டார்.

மெஹபூபாவின் அழைப்பு நிராகரிப்பு: முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முதல்வர் மெஹபூபா முஃப்தி விடுத்த அழைப்பை பிரிவினைவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தனர்.

இதுதொடர்பாக பிரிவினைவாதத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் (ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர்கள்), யாசின் மாலிக் (ஜேகேஎல்எஃப்) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:"மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. பேச்சுவார்த்தை தொடர்பாக தெளிவான திட்டத்தை முன்வைக்காத அனைத்துக் கட்சி குழுவுடன் பேசுவதால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை' என்று அந்த கூட்டறிக்கையில் பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை