டாக்கா தாக்குதலில் தொடர்புடையவர் போலீஸாரால் சுட்டுக் கொலை

தினமணி  தினமணி

வங்கதேச உணவகத் தாக்குதலில் தொடர்புடைய இரண்டாவது முக்கியக் குற்றவாளி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைக் குறித்து காவல் துறை உளவுப் பிரிவு உதவி ஆணையர் சன்வர் ஹுசேன் கூறியதாவது: டாக்கா உணவகத் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபர் தலைநகரின் ரூப்நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தைப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு சுற்றி வளைத்தனர். அந்த வீட்டுக்குள் போலீஸார் நுழைய முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் "மேஜர் முராத்' என்று அறியப்படும் நபர் கொல்லப்பட்டார். டாக்கா உணவகத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இவர் இரண்டாவது முக்கியக் குற்றவாளி. வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான தமீம் செளத்ரியின் தளபதியாக அவர் செயல்பட்டு வந்தார். பயங்கரவாதிகளுக்கு அவர் ஆயுதப் பயிற்சி அளித்து வந்தார். இந்தத் தேடுதல் வேட்டையில் காயமடைந்த 3 போலீஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி டாக்கா உணவகத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை