காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு

தினமணி  தினமணி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் மினி தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் தீவைத்ததால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது வன்முறை மிகுந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பாதுகாப்பு கருதி பதற்றம் நிறைந்த பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருந்ததால், ஊரடங்கு உத்தரவு அண்மையில் திரும்பப் பெறப்பட்டது. எனினும், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஏதேனும் மோதல் சம்பவங்கள் நடைபெறலாம் என்பதை கருத்தில் கொண்டு புல்வாமா, குல்காம், ஷோபியான், பாராமுல்லா மற்றும் பத்தன் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஷோபியான் மாவட்டம், பெஞ்சூரா கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டனப் பேரணி நடத்த முயற்சி செய்தபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது மினி தலைமைச் செயலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டோரை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வந்திருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிபி எம்எல்ஏ-வின் வீடு மீது தாக்குதல்: தெற்கு காஷ்மீரின் திரால் தொகுதி எம்எல்ஏ முஷ்டாக் அகமது ஷாவின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

திரால் தொகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. அப்போது எம்எல்ஏ முஷ்டாக் அகமது ஷாவின் வீட்டின் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அவரது வீட்டு ஜன்னல்கள் உடைந்தன.

இதைத் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு போராட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு கருதி எம்எல்ஏவின் வீட்டு அருகே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை