சானியா, போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்

தினமணி  தினமணி
சானியா, போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா (செக் குடியரசு) ஜோடி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - கேப்ரிலா டாப்ரோஸ்கி (கனடா) ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

சானியா மிர்சா - பார்போரா ஸ்டைரிகோவா ஜோடி, விக்டோரிஜா கோலப்பிக் (சுவிட்சர்லாந்து) - நிக்கோல் மெலிசார் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 6-2, 7-6 (5) என்ற செட் கணக்கில் சானியா - பார்போரா ஜோடி வெற்றி கண்டது. போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் சானியா ஜோடி, தங்களது 3-ஆவது சுற்றில், தரவரிசையில் இடம்பெறாத அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸ் - நா ஹிபினோ (ஜப்பான்) ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - கேப்ரிலா டாப்ரோஸ்கி ஜோடி, போலந்தின் லூகாஸ் கியூபோட் - ஆன்ட்ரியா ஹலவகோவா (செக் குடியரசு) இணையை 5-7, 6-3, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. ரோகன் - கேப்ரிலா ஜோடி தங்களது காலிறுதி சுற்றில் ராபர்ட் ஃபாரா (கொலம்பியா) - அன்னா லீனா (ஜெர்மனி) ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

மற்றொரு கலப்பு இரட்டையர் ஆட்டத்தின் 2-ஆவது சுற்றில், நடப்புச் சாம்பியனான இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகோ வான்ட்வெக் - ராஜீவ் ராம் ஜோடியிடம் 7-6 (1), 3-6, 13-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

முன்னதாக பயஸ் தனது ஆடவர் இரட்டையர் பிரிவிலும் தோல்வியைத் தழுவியிருந்தார். அதன்மூலம் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து அவர் முற்றாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

மூலக்கதை