கோர்க்கா இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

தினமணி  தினமணி

கோர்க்கா இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜுயல் ஒராம் தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேற்கு வங்க மாநிலம், காலிம்போங்கில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 கோர்க்கா இனத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு நேர்மையாக எடுத்து வருகிறது. இதில் சட்டரீதியாக சில பிரச்னைகள் உள்ளதால் அவற்றை எவ்வாறு களைவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். நாட்டின் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கோர்க்கா இனத்தவர் வசித்து வருவதால், அவர்கள் குறித்த தகவல்களை மாநிலங்களில் இருந்து பழங்குடியினர் நலத் துறை பெற வேண்டும்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, வாக்குறுதி அளித்தபடி கோர்க்கா இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் அவர்.

மூலக்கதை