சிங்கப்பூர்: மேலும் 2 இந்தியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு

தினமணி  தினமணி

சிங்கப்பூரில் மேலும் இரு இந்தியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் ஸிகா வைராஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஸிகா வைரஸ் பாதிப்பு குறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம்.

சனிக்கிழமை மதிய நிலவரப்படி, புதிதாக 26 பேருக்கு ஸிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிங்கப்பூரில் ஸிகா நோயாளிகளின் எண்ணிக்கை 215-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஸிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இருவர் இந்தியர்கள்.

அவர்கள் இருவரையும் சேர்ந்து, சிங்கப்பூரில் மொத்தம் 15 இந்தியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில், ஸிகா வைரûஸப் பரப்பும் "ஏடிஸ்' கொசுவை ஒழிக்கும் பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, ஸிகா நோய் அறிகுறிகள் தென்படும் நபர்கள், அவர்களுக்கு அந்த நோய் இருப்பது உறுதி செய்யப்படும்வரை தொற்று நோய்த் தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இதோ போல, ஸிகா வைரஸ் தாக்கியிருப்பதற்கான வாய்ப்பு இருப்பவர்களையும் அவர்களது இல்லத்திலேயே தனிமைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக சுகாதாரத் துறை இணையமைச்சர் அமி கோர் தெரிவித்தார்.

ஸிகா தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூலக்கதை