ஜம்முவைத் தனி மாநிலமாக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

தினமணி  தினமணி

ஜம்முவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சரும், சுயேச்சை எம்எல்ஏ-வுமான பவன் குப்தா வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஜம்மு பகுதி மக்களுக்கு என்று சொந்தமாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிலாஷைகள் உள்ளன. ஆனால், காஷ்மீரைச் சேர்ந்தவர்களின் கடந்த 70 ஆண்டுகால ஆட்சியில் அது எதுவும் நிறைவேறவில்லை. தன்னாட்சி, சுயாட்சி, சுதந்திரம் அல்லது பாகிஸ்தானோடு சேர்க்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஜம்மு மக்கள் நிராகரித்து விட்டனர்.

காஷ்மீர் பகுதி, இதுவரை எத்தனையோ மத அடிப்படைவாதிகளைக் கண்டுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி. ஹுசேன் பெய்க் கூற்றின்படி பார்த்தால், அவர்கள் யாரும் சுயாட்சிக்காகவோ அல்லது சுயநிர்ணய உரிமைக்காகவோ போராடவில்லை. தனியொரு முஸ்லிம் நாட்டுக்காகவே போராடுகின்றனர்.

தற்போது மாநிலத்தில் இருக்கும் அரசமைப்பு முறை, நிர்வாகம் ஆகியன காஷ்மீரை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. இதை காஷ்மீரைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாகவும், தங்கள் பகுதி மக்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மாநிலத்தின் அரசியல் பொருளாதார, சமூக வளர்ச்சியில் ஜம்மு, லடாக் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் பயன்பெறக் கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் பவன் குப்தா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை