தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவில்லை: நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்

தினமணி  தினமணி

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் விளக்கமளித்தார்.

"மேட்டூர் அணையில் உள்ள 39 டிஎம்சி தண்ணீர் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு தமிழகத்தின் தேவையை நிறைவு செய்யும் என்பதால், தற்போதைக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து 50.52 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு மீதான விசாரணை கடந்த செப்.2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக தில்லியில் செப்.3-ஆம் தேதி கர்நாடக தரப்பு மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமனை முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக ஒருசில ஊடங்களில் செய்தி வெளியானது. இந்தத் தகவலை முழுமையாக மறுத்து, கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தினமணி செய்தியாளரிடம் கூறியது:

கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள 4 அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இல்லை. கர்நாடக மக்களுக்கு குடிநீருக்கே போதுமான தண்ணீர் இல்லை. இந்த நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல.

காவிரி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு செப்.5-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடகத்தின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத கர்நாடகத்தின் இயலாமையை, அணைகளின் நீர்மட்டம், கர்நாடகத்தின் பாசன மற்றும் குடிநீர்த் தேவை குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றார்.

மூலக்கதை