ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா

தினமணி  தினமணி
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா

நான்கு அணிகள் பங்கேற்ற "ஏ' அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளின் "ஏ' அணிகளுடன் ஆஸ்திரேலியாவின் தேசிய திறன் அணியும் இணைந்த, 4 அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டிக்கு இந்திய, ஆஸ்திரேலிய "ஏ' அணிகள் தகுதி பெற்றன. குயின்ஸ்லாந்தின் மாக்கே நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய "ஏ' அணி டாஸ் வென்றது.

கேப்டன் மணீஷ் பாண்டே முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தொடக்க வீரர்களில் கருண் நாயர் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினாலும், மன்தீப் சிங் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு ஸ்ரேயஸ் ஐயரும் (41 ரன்கள், 64 பந்து), மணீஷ் பாண்டேவும் (61 ரன்கள், 71 பந்து) எதிர்முனையில் சிறப்பாக கைகொடுத்தனர்.

நிதானமாக ஆடி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த மன்தீப் சிங், 95 ரன்களில் (108 பந்து, 11 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். ஜோ மென்னியின் 36.2-ஆவது ஓவரில் மன்தீப் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் பான்கிராப்ட் கேட்ச் செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. கேதார் ஜாதவ் 25 ரன்களுடனும், அக்ஷர் படேல் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, 267 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பான்கிராப்ட் (34 ரன்கள்), நிக் மேடின்சன் (31 ரன்கள்) சிறப்பான தொடக்கம் தந்தாலும், இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹலின் (34 ரன்கள் / 4 விக்கெட்) பந்துவீச்சில் அந்த அணி நிலைகுழைந்தது.

இருப்பினும் கேப்டன் ஹேண்ட்ஸ்காம்ப் (43 ரன்கள்), அலெக்ஸ் ராஸ் (34 ரன்கள்) ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் 26 ரன்களுக்குள்ளாக ஆஸ்திரேலிய "ஏ' அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 209 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 57 ரன்களில் வெற்றிகண்ட இந்திய "ஏ' அணி கோப்பையை வென்றது. ஆட்டநாயகனாக மன்தீப் சிங் தேர்வானார்.

இதனுடன் சேர்த்து "ஏ' அணிகளுக்கிடையிலான கடைசி மூன்று தொடர்களில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனால், அணி வீரர்களையும், அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் பிசிசிஐ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டியுள்ளனர்.

மூலக்கதை