விமானம் தாமதம்: இந்திய பாட்மிண்டன் வீரர்கள் தவிப்பு

தினமணி  தினமணி

விமானம் தாமதமானதால் இந்திய பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் தவிப்புக்கு ஆளாகினர்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டித் தொடர் அந்நாட்டின் பலிக்பாபன் நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் எச்.எஸ். பிரணாய், சாய் பிரணீத், பி.சி.துளசி, சிரில் வெர்மா, ருத்விகா ஷிவானி ஆகியோர் விமானத்தில் ஹைதராபாதிலிருந்து கோலாலம்பூர் சென்று அங்கிருந்து மற்ற விமானங்கள் மூலம் ஜகார்த்தா- பலிக்பாபன் செல்ல பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், மலேசியாவிலிருந்து கோலாலம்பூருக்கு முன்பதிவு செய்திருந்த மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், கோலாலம்பூருக்கு தாமதமாக வந்துசேர்ந்தது. இதனால், ஜகார்த்தா, பலிக்பாபன் இணைப்பு விமானங்களை அவர்கள் தவறவிட்டனர்.

இதுகுறித்து பிரணாய் கூறுகையில், "விமானம் தாமதத்தால் மலேசியா - ஜகார்த்தா, ஜகார்த்தா - பலிக்பன் செல்லும் இரு விமானங்களை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். இருப்பினும் அதிக கட்டணம் கொடுத்து வேறொரு விமானம் மூலம் இங்கு (ஜகார்த்தா) வந்தடைந்தோம். நல்லவேளையாக நாங்கள் பங்கேற்கும் போட்டி புதன்கிழமை தான் (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. ஒருவேளை முதல் நாளிலேயே போட்டி இருந்திருக்குமானால், நாங்கள் அங்கு செல்வதற்கு பதிலாக இப்படியே நாடு திரும்பியிருக்க வேண்டியிருக்கும். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை' என்றார்.

மூலக்கதை