புனிதர் பட்டம்: கொல்கத்தாவில் இல்லத்தில் கொண்டாட்டம்

தினமணி  தினமணி

அன்னை தெரஸா புனிதராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில் கோலாகல கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாடிகன் நகரில் அன்னை தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியை கொல்கத்தாவில் உள்ள மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் தலைமையகமான அன்னை இல்லத்தில் உள்ள கன்னியாஸ்திரிகளும், தெரஸாவை பின்பற்றுவர்களும் நேரலையாக காண்பதற்காக 3 பெரிய திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியைப் பொது மக்களும் கண்டு களிப்பதற்காக அன்னை இல்ல வளாகத்துக்கு வெளியேயும் பெரிய திரை வைக்கப்பட்டது. தெரஸாவின் சமாதிக்கு மரியாதை செலுத்துவதற்காக அன்னை இல்லம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

அன்னை தெரஸா புனிதராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரிய திரைகளில் நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரம் எழுப்பினர்.

கோவாவில் கொண்டாட்டம்: அன்னை தெரஸா புனிதராக அறிவிக்கப்பட்டதை, கோவா மாநிலத்தில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை நேரில் காண்பதற்காக கோவா, டாமன் தேவாலய பிஷப் ஃபிலிப் நெரிஃபெர்ரோ வாடிகன் நகரத்துக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்வை அனைத்து தேவாலயங்களும் கொண்டாடுமாறு அவர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதன்படி கோவா முழுவதும் கொண்டாட்டம் களைகட்டியதோடு சிறப்புப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிரத்தில்...: தாணே, மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் ஆரவாரத்துடன் மக்கள் கொண்டாடினர். புனிதர் பட்டம் வழங்கப்பட்டவுடன், வடக்கு மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரஸா தேவாலயம், புனித அன்னை தெரஸா தேவாலயம் என பெயரிடப்பட்டது.

மூலக்கதை