புவனேசுவரத்தில் முக்கியச் சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர்

தினமணி  தினமணி

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள முக்கியச் சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர் சூட்டப்பட்டது.

வாடிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

அவரை பெருமைப்படுத்தும் விதமாக புவனேசுவரத்தில் உள்ள சத்யா நகர் மற்றும் கட்டாக்- புரி தேசிய நெடுஞ்சாலை, இனி "புனித அன்னை தெரஸா சாலை' என அழைக்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

இதுகுறித்து பட்நாயக் மேலும் கூறியதாவது:

புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரஸாவுக்கு என் இதயம்கனிந்த அஞ்சலியை செலுத்துகிறேன். மாசிடோனியாவில் பிறந்த அவர் 1929-இல் இந்தியாவுக்கு வந்தார்.

பின்னர் ஏழைகள், ஆதரவற்றவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோருக்கு சேவையாற்றும் தன் சொந்த வீடாக இந்தியாவை மாற்றினார்.

ஏழைகளிடமும், இக்கட்டானச் சூழலில் இருப்பவர்களிடமும் எவ்வாறு அன்பு காட்டுவது, அவர்களுக்குச் சேவை செய்வது போன்ற விஷயங்களை அன்னை தெரஸாவை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் பின்பற்ற வேண்டிய தருணம் இது என்றார்.

முன்னதாக, ஒடிஸா கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று புவனேசுவரத்தில் உள்ள சாலைக்கு அன்னை தெரஸாவின் பெயர் சூட்டப்பட்டது.

மூலக்கதை