அமெரிக்க ஓபன்: 4-ஆவது சுற்றில் ஜோகோவிச், நடால்

தினமணி  தினமணி
அமெரிக்க ஓபன்: 4ஆவது சுற்றில் ஜோகோவிச், நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றின் முதல் செட்டில் ஜோகோவிச் 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிர்த்து விளையாடிய ரஷியாவின் மிக்கேல் யூஸ்னி காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக 2-ஆவது சுற்றில் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடவிருந்த செக்.குடியரசின் ஜிரி வெஸ்லே காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜோகோவிச் கூறுகையில், "கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடுத்தடுத்த சுற்றுகளில் எனது எதிராளிகள் விலகியது இதுவே முதல்முறையாகும்' என்றார்.

அடுத்த சுற்றில் பிரிட்டனின் கைல் எட்மான்டை சந்திக்கிறார் ஜோகோவிச். எட்மான்ட் தனது 3-ஆவது சுற்றில் 6-4, 3-6, 6-2, 7-6 (5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது 3-ஆவது சுற்றில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஆன்ட்ரே குஸ்நெட்சோவை தோற்கடித்தார். 2013 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், அதன்பிறகு இப்போது முதல்முறையாக 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் தகுதி நிலை வீராங்கனையான சிஸி பெல்லிûஸ தோற்கடித்தார். அடுத்த சுற்றில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவை சந்திக்கிறார் கெர்பர்.

முன்னதாக விட்டோவா தனது 3-ஆவது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை தோற்கடித்தார்.

 

பயஸ், போபண்ணா ஜோடிகள் தோல்வி

ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான் ஜோடி தோல்வி கண்டது. இந்த ஜோடி 6-2, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்-இஸ்ரேலின் டூடி செலா ஜோடியிடம் தோல்வி கண்டது.

ஆடவர் இரட்டையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டென்மார்க்கின் ஃபிரெடெரிக் நீல்சன் ஜோடி 2-6, 6-7 (5) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பிரையன் பேக்கர்-நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் ஜோடியிடம் தோல்வி கண்டது.

சானியா ஜோடி வெற்றி: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா-குரோஷியாவின் இவான் டோடிக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டொனால்டு யங்-டெய்லர் டெளன்சென்ட் ஜோடியைத் தோற்கடித்தது.

மற்றொரு கலப்பு இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் கேப்ரில்லா டேப்ராவ்ஸ்கி ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் நோவ் ரூபின்-ஜேமி லெப் ஜோடியைத் தோற்கடித்தது.

மூலக்கதை