சிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான கோ-கோ: சென்னை, திருச்சி அணிகள் சாம்பியன்

தினமணி  தினமணி
சிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான கோகோ: சென்னை, திருச்சி அணிகள் சாம்பியன்

காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கிளஸ்டர் 4 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை பள்ளியும், மகளிர் பிரிவில் திருச்சி பள்ளியும் வெற்றி பெற்றன.

மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இப்போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளிலிருந்து 46 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் 36 அணிகளும், மகளிர் பிரிவில் 25 அணிகளும் நாக்-அவுட் முறையில் விளையாடின.

சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை டாக்டர் நல்லி குப்புசாமி சிபிஎஸ்இ பள்ளி அணியும், சேலம் ராமலிங்கபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி அணியும் மோதின. இதில், சென்னை அணி வெற்றி பெற்றது. சிறந்த ஆட்டக்காரராக, சென்னை அணியின் வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டார். மகளிர் பிரிவில், திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயம் பள்ளி அணியும், சேலம் ராமலிங்கபுரம் ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளி அணியும் மோதின. இதில், திருச்சி அணி வெற்றி பெற்றது. திருச்சி அணியின் ஆர்.ஜே. கௌசிகா, சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமை வகித்து, வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கிப் பேசினார். போட்டிகளை நடத்திய செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவர் எஸ்.பி. குமரேசன், பள்ளியின் முதல்வர் ரமேஷ், டீன் பூரணசந்திரன் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மூலக்கதை