முருகப்பா கோப்பை ஹாக்கி: ஓ.என்.ஜி.சி., பஞ்சாப், பிபிசிஎல் அணிகள் வெற்றி

தினமணி  தினமணி

90-ஆவது முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 3-ஆவது நாளில் ஓ.என்.ஜி.சி., பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பிபிசிஎல் அணிகள் வெற்றி கண்டன.

எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் 3-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 6-3 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியைத் தோற்கடித்தது.

ஓ.என்.ஜி.சி. தரப்பில் ஜக்வந்த் சிங் (21, 27, 60) மூன்று கோல்களும், பிரீத்திந்தர் சிங் (16), மன்தீப் அந்தில் (57), குருஜிந்தர் சிங் (67) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். கர்நாடகம் தரப்பில் அபிஷேக் (40, 68) இரு கோல்களும், ஹன்னூர் ஸ்வாமி (15) ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ரயில்வே அணியைத் தோற்கடித்தது. பஞ்சாப் தரப்பில் ககன்தீப் சிங் (11), ஜஸ்கரன் சிங் (62) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்திய ரயில்வே தரப்பில் அமித் ரோஹிதாஸ் (48) ஒரு கோலடித்தார்.

3-ஆவது ஆட்டத்தில் பிபிசிஎல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை ஹாக்கி சங்க அணியைத் தோற்கடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துஷார் கன்டேகர் (65, 69) இரு கோல்களும், ஆமிர்கான் (14), குருபிரீத் சிங் (21), சுநீல் சோம்வார்பெட் (70) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். மும்பை தரப்பில் வால்மீகி (11) ஒரு கோலடித்தார்.

இன்றைய ஆட்டங்கள்

ராணுவ லெவன்-கர்நாடகம்

நேரம்: பிற்பகல் 2.30

ஐஓசி-ஏர் இந்தியா

நேரம்: மாலை 4.15

பஞ்சாப் & சிந்து வங்கி-ஓ.என்.ஜி.சி.

நேரம்: மாலை 6

மூலக்கதை