அல்-காய்தா கைதிகளை விடுவிக்க பாக். ராணுவ முன்னாள் தளபதி மகன் கடத்தல்

தினமணி  தினமணி

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல் - காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியின் மகள்களை விடுவிப்பதற்காக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியின் மகனைக் கடத்தி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ஜவாஹிரியின் மகள்களை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாகவும், அதன் பிறகு ராணுவத் தலைமைத் தளபதியின் மகனை பயங்கரவாதிகள் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

அல் - காய்தா அமைப்பின் சார்பு பத்திரிகையான அல் - மஸ்ரா இதழில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியான அந்த இதழில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

பர்வேஸ் கயானி ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆன போதிலும், பாகிஸ்தான் ராணுவத்திலும், நுண்ணறிவுப் பிரிவிலும் அதிகாரமிக்க நபராகவே இருக்கிறார். அவரது மகனைக் கடத்தியதுதான் ஜவாஹிரியின் இரு மகள்களையும், அல் - காய்தா அமைப்பின் மற்றொரு நிர்வாகி சலீம் அல் ஜவ்ஹாரியின் மகளையும் விடுவிக்க வழிவகுத்தது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உடன்பாட்டுக்கு முதலில் பாகிஸ்தான் ராணுவம் மறுத்ததாகவும், அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பரஸ்பரம் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டதாகவும் அல் - மஸ்ரா இதழ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை