பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்

தினமணி  தினமணி

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஐ.நா. தீர்மானத்தை விரைவுபடுத்தி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதி கலாசாரம் தொடர்பான உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், இந்தியத் தூதரகத்தின் உயரதிகாரி ஸ்ரீனிவாஸ் பிரசாத் பேசியதாவது:

பயங்கரவாதத்தால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் ஒன்றான இந்தியா, பயங்கரவாத அச்சுறுத்தலின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொண்டு, உலக அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை நடைமுறை சார்ந்து தொடர்ச்சியான முறையில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஐ.நா. சபையையும், அதன் உறுப்பு நாடுகளையும் வலியுறுத்துகிறது.

பெரிதும் விவாதிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான ஒருங்கிணைந்த தீர்மானத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிப்பது, அத்தகைய நடவடிக்கைகளில் முக்கியமானதாகும்.

பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் இன்றைய உலக அமைதிக்கு வெறும் அச்சுறுத்தலாக விளங்குவதோடு, சமூகங்களையும் சர்வதேச ஒழுங்கையும் சீர்குலைக்கின்றன.

இந்த அச்சுறுத்தல் உலகில் ஏதோ ஒரு மூலையில் மட்டும் நிகழ்வதல்ல; உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது என்பதை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, துருக்கி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என அண்மையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் எதிரொலிக்கின்றன.

வறுமையின் படியில் இருந்து மக்களை வெளிக்கொணர்வதோடு, அமைதியான சமூகத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா விரும்புகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது அமைதியான சர்வதேச ஒழுங்கை உள்ளடக்கியது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

எனவே, தெற்காசியாவில் உள்ள எங்கள் அண்டை நாடுகளுடன் பிராந்திய பரஸ்பரத் தொடர்புகளை நாங்கள் வலியுறுத்தி வருவதோடு, வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் பகிர்ந்து வருகிறோம். உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிகழும் வன்முறைகளை எதிர்கொண்டு, அமைதியை நிலைநாட்டுவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

மோதல்களாலும், வன்முறைகளாலும் அரசு அமைப்புகளின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. அதன் எதிரொலியாக, அகதிகள் பிரச்னை பெரிய அளவில் வெடிக்கிறது. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

எனவே, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.

மூலக்கதை