இங்கிலாந்துக்கு 4-ஆவது வெற்றி

தினமணி  தினமணி

பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அசார் அலி 80 ரன்களும், இமாத் வாசிம் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் சேர்த்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டான், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து வெற்றி: பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 14, அலெக்ஸ் ஹேல்ஸ் 8, பின்னர் வந்த ஜோ ரூட் 30, கேப்டன் இயோன் மோர்கன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. ஆனால் 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பென் ஸ்டோக்ஸ்-ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி 103 ரன்கள் குவிக்க, ஆட்டம் இங்கிலாந்து வசமானது. பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 69, பேர்ஸ்டோவ் 83 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த மொயீன் அலி 48 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்கள் விளாச, 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்து வெற்றி கண்டது இங்கிலாந்து. பாகிஸ்தான் தரப்பில் முகமது இர்ஃபான் 2 விக்கெட் எடுத்தார்.

ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை