இலங்கை சீர்திருத்த நடவடிக்கைகள்: பான் கி-மூன் வரவேற்பு

தினமணி  தினமணி
இலங்கை சீர்திருத்த நடவடிக்கைகள்: பான் கிமூன் வரவேற்பு

இலங்கை அரசு எடுத்து வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வரவேற்பு தெரிவித்தார்.

இலங்கைக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட அவர் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இலங்கை எடுத்து வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். இது தொடர்பாக பான் கி-மூனின் செயலர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கை அரசின் நல்லிணக்கம், நீதி பரிபாலனம் உள்ளிட்ட - பரவலாக ஏற்கத் தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வரவேற்பு தெரிவித்தார். இலங்கை எடுத்து வரும் பல்வேறு சீர்திருத்தம் மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அந்நாட்டில் நீடித்த அமைதியும் வளர்ச்சியும் ஏற்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரையும் மேம்படுத்த இலங்கை அதிபர் உறுதிபூண்டுள்ளதும், அவரது தலைமைப் பண்பும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனுக்குப் பெரும் உற்சாகமூட்டுவதாக உள்ளது என்று அவர் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், இளைஞர்கள்தான் அந்நாட்டின் மிகப் பெரிய சொத்து, நாட்டின் வளர்ச்சியில் அவர்களுடைய பங்கு மகத்தானதாக இருக்கும் என்று பான் கி-மூன் தெரிவித்தார்.

உலகெங்கும் இளைஞர்கள் என்றாலே பயங்கரவாதிகளின் சதி வலையில் எளிதாக சிக்கிவிடுபவர்கள் என்பது போன்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால், உலகெங்கிலும் அமைதியும் பாதுகாப்பும் நிலவ வேண்டும் என்றுதான் இளைஞர்கள் விரும்புகின்றனர். வன்முறை - தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வில் அவர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் அவர்கள் பங்கு மகத்தானதாக இருக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை