ஜப்பானில் கடும் புயல்: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு

தினமணி  தினமணி

ஜப்பானில் வீசிய கடும் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

ஜப்பானின் பல பகுதிகளில் கடும் புயல் வீசியது. செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால், பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, ஜப்பானின் ஹோன்ஷு தீவில் உள்ள இவாய்ஸýமி நகரில் தொடர்ந்து பெய்த மழை கடும் சேதத்தை விளைவித்தது. அந்த நகரில் உள்ள முதியோர் காப்பகம் இடிந்து விழுந்ததில் 9 முதியவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மேலும் இருவரது உடல்களை இவாய்ஸýமி நகர் அருகே உள்ள ஆற்றில் இருந்து போலீஸார் மீட்டனர். இதையடுத்து, கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்தது.

மேலும், இவாத்தே மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் எந்த வித உதவியும்பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த 10 நாள்களில் மூன்று பெரும் புயல்கள் ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளைத் தாக்கின.

இந்த சூழ்நிலையில், தென் தீவு பகுதியான கியூஷு அருகே புதிய புயல் உருவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இந்தப்புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை