ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு எதிரொலி: டெலிகாம் நிறுவனங்கள் சந்தை மதிப்பில் ரூ.16,997 கோடி வீழ்ச்சி

தினமணி  தினமணி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன கட்டண அறிவிப்பையடுத்து, தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.16,997 கோடி குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு, ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தார்.

இதன் எதிரொலியாக, தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.16,997 கோடி வரை இழப்பைக் கண்டது.

குறிப்பாக, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கின் விலை 6.37% வீழ்ச்சி கண்டது. இதனால், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,932 கோடி குறைந்தது. ஐடியா நிறுவனப் பங்கின் விலை 10.48% வரை வீழ்ச்சி கண்டதையடுத்து, அதன் சந்தை மதிப்பு ரூ.3,709 கோடி சரிந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளின் விலை 8.81% குறைந்ததால் அதன் சந்தை மதிப்பு ரூ.1,356 கோடி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் குறைந்து 28,423 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 11 புள்ளிகள் குறைந்து 8,774 புள்ளிகளாக நிலைத்தது.

 

மூலக்கதை