இறந்துவிட்டதாக "வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

தினமணி  தினமணி
இறந்துவிட்டதாக வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

இறந்து விட்டதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நான் பட்டிமன்ற பேச்சாளராகவும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலராகவும் இருந்து வருகிறேன். இதற்கிடையே கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய நண்பர் இனிகோ இருதயராஜ், என்னை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், நான் இறந்துவிட்டதாக கட்செவி அஞ்சலில் வதந்தி பரவுதாக தெரிவித்தார். மேலும் கட்செவி அஞ்சலில் பரவும், அந்த தகவலையும் எனக்கு அனுப்பினார். அதில் திமுக பேச்சாளர் லியோனி, புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பலி என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் இருந்து வருகிறேன். இதற்கிடையே உறவினர்கள், நண்பர்கள், எனது ரசிகர்கள் ஆகியோர் என்னை செல்லிடப்பேசி மூலம் கடந்த 4 நாள்களாக தொடர்பு கொண்டு, கட்செவி அஞ்சல் மூலம் பரவும் வதந்தி குறித்து கேட்டு வருகின்றனர்.

எனவே கட்செவி அஞ்சலில் நான் இறந்து விட்டதாக வதந்தியைப் பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மூலக்கதை