கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக...

தினத்தந்தி  தினத்தந்தி
கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக...

சென்னை,

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை மாமல்லபுரம் போலீசார் திருவண்ணாமலையில் கைது செய்தனர்.

கள்ளக்காதலியின் கணவர் கொலை

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 43). இவர், கடந்த 2009–ல் சென்னையில் வேலை செய்த போது, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவியுடன் கள்ளத்
தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சுரேஷ், ரவியை கண்டித்தார்.

தனது கள்ளக்காதலுக்கு சுரேஷ் தடையாக உள்ளாரே என ஆத்திரமடைந்த ரவி, சுரேசை நைசாக பேசி மாமல்லபுரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள திருவிடந்தை சவுக்கு தோப்பில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது போதையில் இருந்த சுரேசை, ரவி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குத்திக்கொலை செய்தார்.

7 ஆண்டுகளாக தலைமறைவு

இந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 3 மாதம் சிறையில் இருந்த ரவி, அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன்பிறகு அவர், இந்த வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக ரவி தலைமறைவு குற்றவாளியாக வாழ்ந்து வந்தார்.

குற்றவாளி கைது

இந்தநிலையில் குற்றவாளி ரவி, திருவண்ணாமலையில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்–இன்ஸ்பெக்டர் கோதண்டன், தலைமைக்காவலர் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ஒரு இடத்தில் பதுங்கி இருந்த ரவியை கைது செய்தனர்.

பின்னர் அவரை மாமல்லபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மூலக்கதை