விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிறுவனங்கள் மிக குறைவு: ரயில்வே ஐஜி ராமசுப்பிரமணி

தினமணி  தினமணி
விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிறுவனங்கள் மிக குறைவு: ரயில்வே ஐஜி ராமசுப்பிரமணி

நம் நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளி, கல்லூரிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணி வேதனை தெரிவித்தார்.

எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி நடத்தும் கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கின. 4 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகளும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

இதையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ராமசுப்பிரமணி பேசியது:

நமது நாட்டில் மருத்துவர்கள், பொறியாளர்கள், மென்பொறியாளர்கள் என அனைத்துத் துறையினரும் சிறந்து விளங்குகின்றனர். அதனால் உலகம் முழுவதும் அவர்களுக்கு வரவேற்பு உள்ளது. ஆனால் விளையாட்டுத் துறையில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். 130 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில், ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களைப் பெறுவதற்குக் கூட போராடும் நிலைதான் உள்ளது. நம் நாடு பெற்ற ஒட்டுமொத்தப் பதக்கங்களை அமெரிக்காவின் ஒரு நீச்சல் விளையாட்டு வீரர் சமன் செய்துவிட்டார்.

நமது நாட்டில் திறமையான வீரர்களுக்குப் பஞ்சமில்லை. அரசும் விளையாட்டுத் துறைக்கென்று பல கோடி ரூபாய் ஒதுக்கி, விளையாட்டு அரங்குகள், மைதானம், வீரர்களுக்கான விடுதிகள் என பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பல பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. பெற்றோரும், ஆசிரியர்களும் விளையாட்டில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை சுதா ஷா, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், கல்லூரியின் செயலருமான மனோஜ்குமார் சொந்தாலியா, கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், விளையாட்டுப் போட்டிகளுக்கான தலைவர் கிரண் வர்மா, கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் அமுதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

மூலக்கதை