நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்: அன்புமணி கண்டனம்

தினமணி  தினமணி
நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்: அன்புமணி கண்டனம்

நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறையை கைவிட்டு, மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது.

நகர்பாலிகா சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல்கள்தான் நடத்தப்பட்டு வந்தன.

2006-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக பேரூராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டன. அதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அது மட்டுமின்றி, 2011-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பேரூராட்சித் தலைவர் முதல் மேயர் வரையிலான பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது.

ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு தற்போது அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது உள்ளாட்சி ஜனநாயகத்துக்கு நல்லதலல்ல அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை