மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றும் தீர்மானம் நிறைவேறியது

தினமலர்  தினமலர்
மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றும் தீர்மானம் நிறைவேறியது

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானம், அம்மாநில சட்டசபையில், நேற்று நிறைவேறியது.



மேற்குவங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பெயரை, பெங்காலியில், 'பங்கலா' என்றும், ஆங்கிலத்தில், 'பெங்கால்' என்றும், ஹிந்தியில், 'பங்கல்' என்றும் மாற்றுவதற்கான தீர்மானம், நேற்று கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பெயரை மாற்றும் முயற்சிக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் கட்சிகள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.


சட்டசபை கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம், முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: 'பங்கலா' என்பது இந்த மாநிலத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. இந்த தீர்மானம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிஉள்ளேன். இந்த தீர்மானத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டிலும் இதுதொடர்பான மசோதா பிரச்னையின்றி நிறைவேறும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை