எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா: நிதி திரட்டி 3,000 பேருக்கு கண்புரை சிகிச்சை : சுதா ரகுநாதன் தகவல்

தினமணி  தினமணி
எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா: நிதி திரட்டி 3,000 பேருக்கு கண்புரை சிகிச்சை : சுதா ரகுநாதன் தகவல்

எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவையொட்டி ஏழை மக்கள் 3,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்ட அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து சுதா ரகுநாதன் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சங்கீதம் பக்திப் பூர்வமானது. அவரைச் சந்திக்கும் போதெல்லாம் இன்னும் நன்றாகப் பாட வேண்டும் என்றும், தனது கீர்த்தனைகளைத் தேர்ந்தெடுத்துப் பாட வேண்டும் என்றும் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இப்போதும் அவர் எனது உணர்வுகளில் கலந்திருக்கிறார். அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா, சிகாகோ, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ், டல்லஸ், ஹூஸ்டன் ஆகிய 6 நகரங்களில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் எம்.ராஜீவ் (வயலின்), திருவாரூர் வைத்தியநாதன் (மிருதங்கம்), ஆர்.ராமன் (மோர்சிங்) ஆகியோர் அடங்கிய குழுவினருடன் பங்கேற்கவுள்ளேன்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் சார்பில் ஏழை மக்கள் 3,000 பேருக்கு இலவசமாக கண்புரை அறுவை சிகிக்சை மேற்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து இதேபோல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அமெரிக்க ஐ.நா.சபையில் எனது இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றார்.

புதுதில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் "பார்வைக்காக ஒரு இசைப் பயணம்' என்ற தலைப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சிகள் பல முறை நடத்தப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட நிதி சங்கர நேத்ராலயாவின் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என சங்கர நேத்ராலயாவின் இயக்குநர் (நிர்வாகம்) அகிலா கணேசன் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது சங்கர நேத்ராலயா துணைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், விழித்திரை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் தருண் சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.

 

மூலக்கதை