அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்; ஜோகோவிச்-முர்ரே இடையே கடும் போட்டி

தினத்தந்தி  தினத்தந்தி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்; ஜோகோவிச்முர்ரே இடையே கடும் போட்டி

நியூயார்க்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் பட்டம் வெல்வதில் ஜோகோவிச், முர்ரே இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

அமெரிக்க ஓபன்

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசியில் வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) சமீப காலமாக தடுமாறி வந்தாலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவருக்கே வாகை சூடுவதற்கு நல்ல வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். விம்பிள்டனில் 3-வது சுற்றுடனும், ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றுடனும் வெளியேறிய ஜோகோவிச், கை மணிக்கட்டு காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக தேறவில்லை. அது மட்டுமின்றி சில குடும்ப பிரச்சினையாலும் தனது கவனம் சிதறி விட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனாலும் ஆட்டத்தின் போது முழு உத்வேகத்தை எட்ட முடியும் என்று நம்புகிறார்.

ஆன்டி முர்ரே

முதல்சுற்றில் போலந்தின் ஜெர்சி ஜானோவிச்சை எதிர்கொள்ளும் ஜோகோவிச், கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோத வேண்டி வரலாம். ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தற்போது அற்புதமாக விளையாடி வருகிறார். ஏற்கனவே விம்பிள்டனை வசப்படுத்திய முர்ரே அதே ஆதிக்கத்தை அமெரிக்க ஓபனிலும் தொடரும் முனைப்பில் உள்ளார். ஜோகோவிச்சுக்கு, உண்மையான எதிரியாக முர்ரே தான் இருப்பார். முர்ரே தனது முதல் சுற்றில் லுகாஸ் ரோசோலுடன் (செக்குடியரசு) மோதுகிறார். இதே போல் ரபெல் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), சோங்கா (பிரான்ஸ்), நிஷிகோரி (ஜப்பான்), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் சவால் கொடுக்க காத்திருக்கிறார்கள். கால்முட்டி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுக்கும் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இந்த முறை விலகி விட்டார். 1999-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க ஓபனை தவற விடுகிறார்.
தனது வாழ்க்கையில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சகெனத் மைனெனி முதல் ரவுண்டில் செக்குடியரசின் முன்னணி வீரர் ஜிரி வெஸ்லியை எதிர்கொள்கிறார்.

செரீனா- கெர்பர்

பெண்கள் ஒற்றையர் பிரிவை பொறுத்தமட்டில், முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 2-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஸ்பெயினின் கார்பின் முருகுஜா, போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா, ருமேனியாவின் சிமோனா ஹாலப், செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ், இத்தாலியின் ராபர்ட்டா வின்சி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

7-வது முறையாக அமெரிக்க ஓபனுக்கு குறி வைத்திருக்கும் செரீனா இதில் வெற்றி பெற்று தனது ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையை 23-ஆக உயர்த்த தீவிரம் காட்டுகிறார். ஆனால் தோள்பட்டை காயத்தால் அண்மையில் சில தொடர்களில் இருந்து விலகிய செரீனா எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை இப்போதே கணிப்பது கடினம். அவர் ரஷியாவின் மகரோவாவுடன் முதல் ரவுண்டில் களம் காணுகிறார். அமெரிக்க ஓபனை கைப்பற்றினால் செரீனாவிடம் இருந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிப்பறித்து விடும் வாய்ப்பில் உள்ள ஏஞ்சலிக் கெர்பர் தனது முதல் ஆட்டத்தில் சுலோவேனியாவின் போலோனா ஹெர்காக்குடன் மோத இருக்கிறார்.

இந்திய ஜோடிகள்

பெண்கள் இரட்டையரில் முதல் நிலை நட்சத்திரம் இந்தியாவின் சானியா மிர்சா மீது எதிர்பார்ப்பு உள்ளது. மார்ட்டினா ஹிங்கிசை விட்டு பிரிந்த சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் இணைந்து களம் இறங்குகிறார். அமெரிக்க ஓபனுக்கு முன்பாக அடுத்தடுத்து இரண்டு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சாவுக்கு அது நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும். இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்காவுடன் கைகோர்க்கிறார்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.310 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.23½ கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.11¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இரட்டையர் பிரிவில் வெற்றி காணும் ஜோடி ரூ.4 கோடியை பெறும்.

முதல் நாளில் ஜோகோவிச், ரபெல் நடால், முகுருஜா உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணி முதல் நடக்கும் இந்த போட்டியை டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மூலக்கதை