கேப்டனாக இருந்தபோது சக வீரர்கள் ஆதரவளிக்கவில்லை

தினமணி  தினமணி
கேப்டனாக இருந்தபோது சக வீரர்கள் ஆதரவளிக்கவில்லை

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக தான் இருந்தபோது, அணியின் சக வீரர்கள் தனக்கு உரிய ஆதரவளிக்கவில்லை என்று அந்த அணியின் திலகரத்னே தில்ஷன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

2011-இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக இருந்தபோது, விரலில் காயம் ஏற்பட்டது. என்னால் விளையாட முடியாத காரணத்தால், அந்தத் தொடரின் 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்படுமாறு, அப்போது அணியில் இருந்த இரண்டு முன்னாள் கேப்டன்களிடம் (குமார் சங்ககாரா, மகிளா ஜெயர்வர்தனே) கேட்டேன்.

அதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்து விட்டனர். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகே ஒருவர் (சங்ககாரா) கேப்டனாக செயல்பட ஒப்புக்கொண்டார்.

அதேபோல், நான் கேப்டனாக இருந்த ஒரு போட்டியின்போது, காயம் காரணமாக பந்துவீச முடியாது என்று தற்போதைய கேப்டன் மேத்யூஸ் கூறினார். ஆனால், நான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவர் மீண்டும் பந்துவீசத் தொடங்கியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிய விதம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எனினும், எனது தனிப்பட்ட உணர்வுகள் எனது ஆட்டத்தை பாதிக்காமல் பார்த்துக்கொண்டேன்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் 500 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்றேன். அப்போது அணியின் கேப்டன் யார் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியவர்கள் குறித்து நான் சிந்திக்கவில்லை. எனது நாட்டுக்காக விளையாடுவதை மட்டும் கருத்தில் கொண்டேன் என்று தில்ஷன் கூறினார்.

 

மூலக்கதை