பிரிட்டனில் சீனத் தூதரகம் முன்பு பலூச் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தினமணி  தினமணி
பிரிட்டனில் சீனத் தூதரகம் முன்பு பலூச் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பொருளாதார மண்டலத்தை பலூசிஸ்தானில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் வாழ் பலூச் மற்றும் சிந்தி அமைப்பினர் அங்குள்ள சீனத் தூதரகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பலூசிஸ்தானில் 4,600 கோடி டாலர் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) செலவில் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக, அப்பகுதியில் மனித உரிமை மீறல் ஏற்படுவதாக கூறி பலூச் மற்றும் சிந்தி அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் வாழும் பலூச் அமைப்பினர் சீனத் தூதரகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலூச் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர் கூறியதாவது:

சிறுபான்மையராக இருக்கும் நாங்கள் எங்கள் மண்ணை விட்டு வலுக்கட்டாயமாக துரத்தப்படுகிறோம். இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே, பாகிஸ்தான் இந்த பொருளாதார மண்டலத் திட்டத்தை பலூசிஸ்தானில் நிறைவேற்றுவதற்கு எதிராக உலக நாடுகள் நிர்பந்தம் கொடுக்க வலியுறுத்தி இத்தகைய தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பலூச் மனித உரிமை கவுன்சில்-பிரிட்டன், உலக சிந்தி காங்கிரஸ் ஆகிய அமைப்புகளும் கலந்து கொண்டன.

மூலக்கதை