பெல்ஜியம் தடயவியல் மையத்துக்குத் தீ வைப்பு

தினமணி  தினமணி
பெல்ஜியம் தடயவியல் மையத்துக்குத் தீ வைப்பு

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெஸ்ல்அமைந்துள்ள தடய அறிவியல் மையத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நிகழ்த்தி, அந்த மையத்தைத் தீவைத்துக் கொளுத்த முயன்றனர்.

எனினும், பிரஸ்ஸெல்ஸ்ஸின் புறநகர்ப் பகுதியான நேடெர்-ஓவர்-ஹெம்பீக் என்னும் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் இனே வேன் வைமெர்ஷ் தெரிவித்ததாவது:

தடய அறிவியல் மையத்துக்கு காரில் வந்த சில மர்ம நபர்கள், அந்தக் காரை வாயில் கதவில் மோதி உள்ளே நுழைந்தனர்.

மேலும், கட்டடத்துக்குள் பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தினர். இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் ஒரு பகுதியும், அருகிலிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. குற்ற வழக்குகள் தொடர்பான தடயங்களை அழிக்கும் நோக்கத்திலேயே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கருதுகிறோம் என்றார் அவர்.

பிரஸ்ùஸல்ஸ் விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் கடந்த மார்ச் மாதம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நகரில் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை