இலங்கைத் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்

தினமணி  தினமணி
இலங்கைத் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்

"இலங்கைத் தமிழர்கள் அதிகாரப்பகிர்வையே விரும்புகின்றனர்; தனி நாட்டை விரும்பவில்லை'' என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறைக்கு முதல் முறையாக சம்பந்தன் ஞாயிற்றுக்கிழமை வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழர்கள் அதிகாரப் பகிர்வையே விரும்புகின்றனர். தனி நாடு வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை. போரில் எங்களது குழந்தைகள் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளேயே (ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே) எங்களுக்குத் தீர்வு அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

புதிய அரசமைப்புச் சட்டத்தில் இதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகிறோம். அப்போதுதான் அனைத்து சமூகத்தினரின் பங்களிப்புடனும் நாடு வளர்ச்சியடைய முடியும்.

சிங்கப்பூரைப் போன்று இலங்கையும் முன்னேற வேண்டும் என்பதை நாம் லட்சியமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அதில் நாம் தோல்வியடைந்து விட்டோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச்னைகளுக்கு இன்னமும் நாம் தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஐக்கிய இலங்கையே எங்களுக்குத் தேவை. இந்தச் செய்தியை தெரிவிப்பதற்கு இந்நிகழ்ச்சியை எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். புதிய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாகப் பணியாற்றின. புதிய அரசமைப்புச் சட்டத்தால் தமிழருக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் சம்பந்தன்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தனிநாடு கோரி ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு ஆதரவாக தீவிர நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டதையடுத்து, தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மென்மையான அணுகுமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்து வருகிறது.

பிரபாகரனின் பெயரை தெரிவிக்க திட்டம்: இதனிடையே, இலங்கைப் போரில் காணாமல் போனவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை அளிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட போருக்குப் பின்னர் பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான விடியோ பதிவை இலங்கை ராணுவம் வெளியிட்டது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் இதை நம்பவில்லை.

 

மூலக்கதை