எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் ராணுவ பாதுகாப்பை...

தினத்தந்தி  தினத்தந்தி
எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் ராணுவ பாதுகாப்பை...

பீஜிங்,

பல நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணைகளை சோதனை செய்து அவ்வபோது அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது வடகொரியா. இதை சமாளிக்கும் வகையில் தென் கொரியாவில் அமெரிக்காவின் தயாரிப்பில் உருவான 'தாட்' ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் இந்த ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா இதனை கடுமையாக எதிர்த்தது. மேலும், ரேடார் கண்காணிப்பில் சிக்காமல் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் அச்சறுத்தல் உள்ளதாகவும் கவலை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி எதிர் தாக்குதல் நடத்தும் திறமைகளை மேம்படுத்த சீனா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செயற்கை அறிவு கொண்ட அடுத்த தலைமுறை தாக்குதல் ஏவுகணைகளை நவீன வடிவமைப்புடன் உருவாக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது சீனா.

சென்ற ஆண்டு முதல்முறையாக டோங்பெங்-21டி ஏவுகணைகளை சீனா காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஏவுகணைகள் 1700 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வெடித்துச் சிதறச் செய்யும் வல்லமை வாய்ந்தது ஆகும்.

இந்நிலையில், தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் செயற்கை அறிவுத்திறனுடன் கூடிய ஷார்ட் மற்றும் மீடியம் ரேஞ்ச் ஏவுகணைகளை புதிதாக உருவாக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வான் எல்லைகளை பாதுகாக்க தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனமயமாக மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகளை விரைவில் உருவாக்கி அதை ராணுவத்தில் சேர்க்க போவதாக சீன விமானப்படையின் செயதித்தொடர்பாளர் சென் ஜின்கே தெரிவித்துள்ளார்.

இந்திய-சீன எல்லையில் பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா நிலை நிறுத்த போவதாக வெளியான செய்திக்கு சீனா அச்சம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை