யாழ் முகாம் மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த உலக வங்கி அதிகாரிகள்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
யாழ் முகாம் மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த உலக வங்கி அதிகாரிகள்

யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதந்த உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி எனட் டிக்சன் தலமையிலான குழுவினர், மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சென்று வலி,வடக்கு மக்களை சந்தித்துள்ளனர்.

உலகவங்கியின் அதிகாரிகள் குழு இன்று முற்பகல் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சென்று, மக்களுடைய வாழ்க்கைதரம், உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே நேரடியாக கேட்டு அறிந்து கொண்டுள்ளது.

இதன்போது, 27 வருடங்களாக பல்வேறு விதமான அவலங்களுக்கு மத்தியில் நிரந்தர தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக மக்கள் உலக வங்கியின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன், தங்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்குமாறும், பருவமழை ஆரம்பிக்கும் நிலையில் மழை வெள்ளத்தினால் வருடாந்தம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்குமாறும் கேட்டு கொண்டனர்.

இந்நிலையில் மக்களுடைய கருத்துக்களுக்கு பதிலளித்த உலக வங்கியின் உபதலைவர் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர், உலக வங்கி வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமான உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை