நிர்வாகத்தை சீர்குலைக்க நினைத்தால் இரண்டு மடங்கு பாய்ச்சலில் எதிர்கொள்வோம்

தினமணி  தினமணி
நிர்வாகத்தை சீர்குலைக்க நினைத்தால் இரண்டு மடங்கு பாய்ச்சலில் எதிர்கொள்வோம்

உறுப்பினர்களின் நலனுக்காக நேர்மையோடு உழைத்துக் கொண்டிருக்கும் நடிகர் சங்க நிர்வாகத்தை சீர்குலைக்க நினைத்தால், இரண்டு மடங்கு பாய்ச்சலில் அதை எதிர் கொள்வோம் என தெரிவித்தது.


இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
தென்னிந்திய நடிகர் சங்கம் 2016-2018 காலத்திற்கான தேர்தல் நடந்து மிக சரியாக ஒரு வருடம் நிறைவடையும் இந்த நேரத்தில் எங்களுடைய செயல்பாடுகளை நாங்கள் திருப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.


அதில் சரி, தவறுகளை ஆராய்ந்து நேர்த்தி செய்து கொள்வது மிக முக்கியமான செயல். உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம், கல்வி வசதிகள், பி.யூ.சின்னப்பாவுக்கு நூற்றாண்டு விழா, மருத்துவ அடையாள அட்டை உள்ளிட்ட பல திட்டங்களைச் சிறப்பாக செய்திருக்கிறோம்.


பொருளாதார மேம்பாடு: நிர்வாகப் பரிந்துரையின் பேரில், செயற்குழு, நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு சங்க மூத்த உறுப்பினர்களைக் கொண்ட கட்டட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அனைத்து முதற்கட்ட பணிகளும் முழுமையடைந்திருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே நட்சத்திர கிரிக்கெட் நடத்தி இன்று பொருளாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறோம்.


இந்த செயல்பாட்டில் ஏதாவது குறைகள், சந்தேகங்கள் அல்லது விமர்சனங்கள் இருந்தால், இதை தெளிவுப்படுத்த வேண்டியது எங்களுடைய கடமை.


சட்டம் காட்டும் திசையில்…: நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ சட்டப்படி எங்களைத் தொடர்பு கொள்பவர்களை நாங்கள் என்றுமே மதித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், திட்டமிட்டு, சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அதற்கு முரண்பாடாக இருந்தன. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது. சங்கம் தனிப்பட்ட நபர்கள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்காது, சட்டம் வழி காட்டும் திசையிலேயே பயணிக்கும்.


உறுப்பினர்களின் நலனுக்காவும், நேர்மையோடு உழைத்துக் கொண்டிருக்கும் இந்த நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால், இரண்டு மடங்கு பாய்ச்சலில் அதை எதிர் கொள்வோம்.


விரைவில் அவரச செயற்குழு: கட்டடம் கட்டுவது குறித்து சட்ட ரீதியாக பொருளாதார ரீதியாக, நடைமுறை ரீதியாக ஆயிரம் முறை அலச வேண்டியிருக்கிறது. அதற்கான காலத்தை அத்திட்டம் எடுத்துக் கொள்ளும்.


சில நபர்களை சேர்த்துக் கொண்டு அலுவலக ஊழியர்களை தாக்குவது போன்ற ஒரு சில சம்பவம் நடந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதை சாதாரணமாக எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதற்காக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நினைக்கிறோம். அதற்காக அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் உடனடியாக நடத்தப்படும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை