நடிகர் சங்கத்தில் ஊழலா? நடிகர் சங்கத் தலைவர் விஷால் பரபரப்பு பதில்!

தினமணி  தினமணி

நடிகர் சங்கத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறப்படும் புகார்களுக்கு அடிப்படை ஆதாரம் கிடையாது என்று நடிகர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தலைவர் விஷாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி திருவல்லிக்கேணியில் உள்ள சிறுவர்கள் இல்லம் ஒன்றில் குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் பொழுது அவர் கூறியதாவது:

நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது என்று கூறப்படும் புகார்கள் அடிப்படை ஆதாரம் அற்றது. நாங்கள் புதிய நிர்வாகிகள்  பதவியேற்ற பின்பு வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும் அலுவலகத்தில் உள்ளன. சங்க உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம்.

முன்பிருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் மீது நாங்கள் எழுப்பிய புகார்களுக்கு ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது. அதே போல் இப்பொழுது எங்கள் மீது புகார் கூறுபவர்களும் ஆதாரத்தை வெளியிடலாமே ? வெறுமனே குற்றசாட்டுகளை கூறக் கூடாது.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை கண்டித்து துணை நடிகர், நடிகைகள் சிலர் சனிக்கிழமை காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்  இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகம் முன்னால்  கூட்டமாக திரண்டனர். அப்போது அவர்கள் நடிகர் சங்கமே எங்களுக்கு வேலை கொடு, வேலை கொடு என்று முழக்கமிட்டனர். மேலும் அவர்கள் நடிகர் சங்க அலுவலகத்துக்குள் நுழையவும் முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க உறுப்பினரும், 'இந்தியன் ரிப்போர்ட்டர்' பத்திரிகை  ஆசிரியருமான வாராகி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சங்க நிர்வாகிகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை. சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான நிதி வசூலில் முறைகேடு செய்துள்ளனர். மேலும் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணியிலும் டெண்டர் விடாமல் அவர்கள் தன்னிச்சையாக  கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

மூலக்கதை