தமிழகத்தில் மதுவிலக்கை தளர்த்தியது திமுக தான்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

BBC  BBC
தமிழகத்தில் மதுவிலக்கை தளர்த்தியது திமுக தான்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அமலில் இருந்த மதுவிலக்கை தளர்த்தியது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காததால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீது பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் அமலில் இருந்த மதுவிலக்கை 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தான் நீக்கினார் என்றும், மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக . உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது குறித்து பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேட்டார். ஆனால், சபாநாயகர் வாய்ப்பளிக்க மறுக்கவே, திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மதுவிலக்கைத் தளர்த்திய கருணாநிதி, மீண்டும் அதனை அமல்படுத்தியதை சுட்டிக்காட்டினார். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது என்றும் கூறினார்.

இதற்கிடையில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, திமுகவினரை வெளியேற்ற வேண்டுமானால், கச்சத்தீவு மற்றும் மதுவிலக்கு ஆகிய இரண்டு வார்த்தைகளைச் சொன்னாலே போதும்; அவர்களாகவே வெளியேறிவிடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

நேற்று சட்டப்பேரவை நிகழ்வின்போது, அதிமுக உறுப்பினர் ஒருவர் தங்களை 89 வயல்காட்டுப் பொம்மைகள் என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கறுப்புக்கொடி அணிந்து அவைக்கு வந்தனர்.

மூலக்கதை