இலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

BBC  BBC
இலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள்.

2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது விடுதலைப்புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலின் பின்னர் அந்த பிரதேசம் பல மணித்தியாலங்கள் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.

ஓரிரு நாட்கள் இதே நிலை இருந்ததாக கூறப்படுகின்றது

அவ்வேளையில்தான் தங்களை வெளியெறுமாறு விடுதலைப்புலிகளினால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. .

இக்காலப்பகுதியில் இடம் பெற்ற எறிகணை வீச்சுக்களில் அகப்பட்டு 54 முஸ்லிம்கள் பலியானதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள் .

மூதூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாக கூறுகின்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜே.எம் . லாஹீர்.

கினாந்திமுனை ஊடாக மட்டுமே வெளியேற அனுமதியை வழங்கியிருந்த நிலையில் அவ் வழியாக வெளியேறும் போது விடுதலைப்புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம்கள் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மக்கள் கைகளில் அகப்பட்ட பொருட்களுடனும் உடுத்த உடையுடனும் பல மைல் தொலைவிலுள்ள கந்தளாய் பகுதியை சென்றடைந்த மக்கள் ஒரிரு மாதங்கள் .அங்குள்ள நலன்புரி மையங்களில் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் நினைவாக இன்று புதன்கிழமை 26வது 'சுஹதாக்கள் தினம் ' உள்ளுர் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த படுகொலைகள் இடம் பெற்ற மீரா ஜும்மா பள்ளிவாசல் ,குசைனிய்யா பள்ளி வாயில்களில் சிறப்பு மத நிகழ்வுகளும் நடைபெற்றன.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி இரவு வேளை தொழுகையில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் , முதியவர்கள் உட்பட 103 முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச் சுட்டிலும் எறிகுண்டு தாக்குதலிலும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

தேசிய சுஹதாக்கள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய நிகழ்வுகளின் பின்னர் ஏற்பாட்டாளர்களினால் பிரகடனமொன்றும் வெளியிடப்பட்டது.

முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற் கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக விசாரணைகளுக்கு என சிறப்பு நீதிமன்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதான கோரிக்கையாக அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் அந்த பிரகடனத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை