கோவை ஈஷா யோகா மையத்தில் நீதிபதி ஆய்வு

BBC  BBC
கோவை ஈஷா யோகா மையத்தில் நீதிபதி ஆய்வு

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யாரும் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களா என ஆய்வுசெய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தப்பட்டது.

கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜின் மனைவியான சத்யவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தங்கள் மகள்கள் கீதா, லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களைப் பார்க்க தங்களை அனுமதிக்கவில்லையென்றும் கூறியிருந்தனர்.

தங்கள் மகள்களைத் தவிர வேறு சிலரும் அங்கு இது போல வைக்கப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தன் மனுவில் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் அடங்கிய அமர்வு, இன்று மதியம் 3 மணியளவில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஈஷா மையத்திற்கு விஜயம் செய்து, அங்கிருப்பவர்களின் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

மனுதாரர் சத்யவதியும் நீதிபதியுடன் சென்று மகள்களைச் சந்திக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று மதியம் 3 மணியளவில் மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் ஈஷா மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட கண்காணிப்பாளர் ரம்யாவும் உடன் சென்றார்.

இதற்கிடையில் இன்று மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஷா மையத்தைச் சேர்ந்த சுவாமி ஏகா, கடந்த 25 ஆண்டுகளாகவே தங்கள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாகக் கூறினார்.

தாங்கள் வனப்பகுதி எதையும் ஆக்கிரமிக்கவில்லையென்றும் தங்கள் வசம் உள்ள நிலங்களுக்கு பட்டா இருப்பதாக வன அதிகாரிகளே அறிக்கை அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மாணவர்களின் பெற்றொர்கள் மட்டுமே ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தின் மீது புகார் தெரிவிப்பதாகவும் ஏகா கூறினார்.

மூலக்கதை