இலங்கை: தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

BBC  BBC
இலங்கை: தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்குள் அடையாள உண்ணாவிரம் ஒன்றை மேற்கொண்டுள்ள அதே வேளையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இன்று (திங்கள் கிழமை) ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

அதேவேளை, கடந்த 2012-ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் நடைபெற்ற தமிழ்க்கைதிகளின் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, உயிரிழந்த தமிழ்க் கைதிகளான நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நெவில் டெல்ருக்ஷன் ஆகியோரின் மரணங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அரசு தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைக் கைதிகளிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்.

ஆயினும், அந்த உறுதி மொழியை நிறைவேற்றத்தக்க வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலேயே சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும், வெளியில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு பல வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை