அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.

டெல்லி விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை விசாரணை நடத்தி சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியது.

டெல்லி மேல்–சபையில் சசிகலா புஷ்பா பேசுகையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும்படி என்னை வற்புறுத்துகிறார்கள். நான் பதவி விலகப்போவது இல்லை. தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். அவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேல்–சபையில் பேசியதை அடுத்து டெல்லியில் உள்ள அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட்டு சசிகலா புஷ்பா பாராளுமன்றம் சென்று வருவதற்கு வாகனத்துடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், வீடு தவிர பாராளுமன்றம் சென்று வருவதற்கு மட்டும் வாகனத்துடன் கூடிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை, டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் டெல்லி மாநில அரசு இதுதொடர்பாக பதிலளிக்க கேட்டுக் கொண்ட ஐகோர்ட்டு, வழக்கின் மீதான விசாரணையை வருகிற நவம்பர் 15–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

டெல்லி போலீஸ் பாதுகாப்பு

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.

புதுடெல்லி மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி பேசுகையில், “சசிகலா புஷ்பா எம்.பி.க்கு பாதுகாப்பு அளிக்க 4 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். சசிகலா புஷ்பாவின் வடக்கு அவின்யூ வீட்டுப்பகுதியில் பிசிஆர் வேன் (டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறை) நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. சசிகலா புஷ்பா அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிஉள்ளார், அவருக்கான அச்சுறுத்தலும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது,” என்று கூறிஉள்ளார்.

மூலக்கதை