தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

BBC  BBC
தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தி.மு.க., அவற்றை விசாரிக்கும்படி மத்தியப் புலனாய்வுத் துறையைக் கோரியுள்ளது.

இது தொடர்பாக தி.மு.கவின் மாநிலங்களவை எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன், மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனரைச் சந்தித்து அளித்த மனுவில் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

இந்தப் பணம் தொடர்பாக தன்னிடம் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால், தன்னை அழைத்து விசாரிக்க வேண்டுமென்றும் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட்டினம் கிளைக்காக கோயம்புத்தூர் கிளையிலிருந்து பணம் கேட்கப்பட்டதாக, ஆவணங்கள் தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்லும்போது அந்தக் கண்டெய்னர்களுக்கு ரிசர்வ் வங்கி மூலம் பாதுகாப்புக் கேட்காததது ஏன் என இளங்கோவன் கேட்டிருக்கிறார்.

இந்த 570 கோடி ரூபாய், புதிய நோட்டுகளாக இருந்ததா, நோட்டுக்களின் மதிப்பும் எண்ணிக்கையும் என்ன, இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்ததா, இந்த விவரங்கள் பதிவுசெய்யப்பட்டனவா எனவும் இளங்கோவன் கேட்டிருக்கிறார்.

ஒரு நாளைக்கு மூன்று லட்சம் ரூபாய் நோட்டுகளையே எண்ண வேண்டுமென ரிசர்வ் வங்கி விதிகள் கூறும் நிலையில், இந்த 570 கோடி ரூபாய் எத்தனை நாட்களில் எண்ணப்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அடுத்த நாள் விடுமுறையாக இருக்கும்போது, இந்தப் பணம் ஏன் வெள்ளிக்கிழமையன்று அனுப்பப்பட்டது என்றும் கோயம்புத்தூரிலிருந்து விசாகப்பட்டனம் செல்லும் பாதையில் திருப்பூர் இல்லாத நிலையில், இந்தப் பணம் ஏன் அந்த வழியாக வந்தது என்றும் இளங்கோவன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறை எந்த விசாரணையும் நடத்தாமல் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தது ஏன் என்றும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் இளங்கோவன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இந்தக் கேள்விகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டால், இந்த ஹவாலா பணத்தைக் கடத்த முயன்ற உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியவரும் என இளங்கோவன் கூறியிருக்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 16ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், 13ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கபள்ளி என்ற இடத்தில் நடந்துகொண்டிருந்த வாகன சோதனையின்போது, 570 கோடி ரூபாய் பணம் நிரப்பப்பட்ட மூன்று கண்டெய்னர் லாரிகள் பிடிக்கப்பட்டன.

பிறகு, அந்தப் பணம் பாரத ஸ்டேட் வங்கியின் கோயம்புத்தூர் கிளையிலிருந்து விசாகப்பட்டினம் கிளைக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டு, பணம் கோயம்புத்தூர் கிளை வசமே ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதனை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

மூலக்கதை