மதுரையில் திருடுபோனது அரசு பஸ்!- பொலிஸில் பரபரப்பு புகார்

TAMIL CNN  TAMIL CNN
மதுரையில் திருடுபோனது அரசு பஸ்! பொலிஸில் பரபரப்பு புகார்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பேருந்து காணாமல் போனது. தேடுதல் வேட்டைக்கு பின்னர், சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே திருமாஞ்சோலை என்ற இடத்தில் பேருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பணிமனைக்குரிய (TN67 N0680) அரசு பேருந்து, செங்கோட்டையில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தங்கமணியும், நடத்துனர் பாண்டிதுரையும் ஓய்வு அறைக்கு சென்றுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் செங்கோட்டை செல்லவதற்காக ஓட்டுநரும், நடத்துனரும் வந்துள்ளனர். அப்போது, பேருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்த காவல்துறையினர், மாயமான பேருந்தை வலைவீசி தேடினர். இந்தநிலையில், மாயமான பேருந்து சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே திருமாஞ்சோலை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

தகவல் அறிந்து பணிமனை மேலாளர், டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மூலக்கதை