6 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட டெல்லி சிறுவன் மீட்பு : சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
6 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட டெல்லி சிறுவன் மீட்பு : சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை

டெல்லியை சேர்ந்த சோனு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டான். தற்போது 12 வயதான நிலையில் அவன் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

டெல்லியை சேர்ந்த சோனு கடந்த 2010-ம் ஆண்டு கடத்தப்பட்டான். இந்நிலையில் வங்காளதேசம் ஜெஸ்சோர் என்ற நகரில் உள்ள குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் சோனு தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெஸ்சோர் நகரில் உள்ள நபரிடம் தான் டெல்லியை சேர்ந்தவர் என்றும், பெற்றோர் குறித்த விவரங்களை கூறியுள்ளான். அதனை தொடர்ந்து டெல்லியில் சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட அந்த நபர் வங்காள தேசத்தில் சிறுவன் தங்கி இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் தங்கள் மகனை மீட்டுத்தரும்படி சிறுவனின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வேண்டுகோளை ஏற்ற சுஷ்மா சுவராஜ் சிறுவனின் மரபணுவையும், சிறுவனின் தாயார் மரபணுவையும் ஒப்பிட்டு அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

மரபணு சோதனையில், இருவரின் மரபணுக்களும் ஒத்துபோனது கண்டறியப்பட்டது. இதற்கிடையே, வங்காளதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்த சுஷ்மா, சோனுவை மீட்கும்படி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அனாதை இல்லத்தில் இருந்து சோனுவை தூதர அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். பத்திரமாக மீட்கபட்ட சிறுவன் இன்று டெல்லி வந்து சேர்ந்தான். பின்பு அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த சுஷ்மா சுவராஜிக்கு சிறுவனின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். பெற்றோருடன் வந்து தன்னை சந்தித்த அந்த சிறுவனை, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கனிவுடன் பேசினார்.

மூலக்கதை