பேஸ்புக் நண்பரா சுவாதியைக் கொன்றார்?- இறுகும் விசாரணை

TAMIL CNN  TAMIL CNN
பேஸ்புக் நண்பரா சுவாதியைக் கொன்றார்? இறுகும் விசாரணை

சுவாதியுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயில்வே போலீசாருடன் இணைந்து சென்னை மாநகர போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சுவாதியைக் கொன்ற கொலையாளி யார்? என்பது பற்றி 5 நாட்களாகியும் எந்தவிதமான துப்பும் துலங்காமலேயே உள்ளது. கேமரா காட்சிகளும், கொலையாளி வீசிவிட்டுச் சென்ற அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகைகளும், போலீஸுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. சுவாதியின் செல்போன் எண்ணை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. அவர் யார் யாருடன் பேசி இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை போலீஸார் சேகரித்தனர். இதன் மூலமாக 100-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களைக் கண்டுபிடித்த போலீஸார் சுவாதியிடம் போனில் பேசிய அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் எந்தவிதத் துப்பும் துலங்கவில்லை.

சுவாதியின் செல்போனில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸார், கொலையாளி எடுத்துச் சென்ற செல்போன் இதுவரை கிடைக்காததால் சுவாதியின் ஃபேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் தொடர்ந்து சாட் செய்து பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் கேமராவில் பதிவாகி இருக்கும் வாலிபர் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்தான் சுவாதியைக் கொன்ற கொலையாளியாக இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் என்றும் கொலையாளியை நெருங்கிவிட்டோம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை