மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க ‘ரிலையன்ஸ்’ ரவுடிகளை ஏவிவிடுவதா?

TAMIL CNN  TAMIL CNN
மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க ‘ரிலையன்ஸ்’ ரவுடிகளை ஏவிவிடுவதா?

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பத்மபிரியா தமது மகனின் எம்.பி.ஏ. படிப்புக்காக பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடனை உடனே செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் அதிகாரிகள் மிரட்டியதால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

நாடு முழுவதும் உயர் கல்வி படிப்புக்காக வங்கிகள் மாணவர்களுக்கு கல்வி கடனுதவி அளித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளை படித்து முடித்துள்ளனர்.

ஆனால் படித்த முடித்த உடனேயே வேலை கிடைக்காததால் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை அடைக்க முடியாத இக்கட்டான துயர நிலையில் அவர்களின் பெற்றோர்கள் தத்தளித்து வருகின்றனர். இத்தகைய கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களிடம் இருந்து தொகையை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஏவிவிடும் குண்டர்கள், அப்பாவி மாணவர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி உடனே பணத்தைச் செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதன்விளைவுதான் இந்த மிரட்டல்களால்தான் கோவை பத்மபிரியா தாம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் குடும்ப சுமையை தோளில் தாங்கியபடி வேலை தேடி அலையும் இளைஞர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இவர்களை மேலும் கடுமையாக மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் ரிலையன்ஸ் குண்டர்களை பாரத ஸ்டேட் வங்கி ஏவிவிடுவது வன்மையாக கண்டனத்துக்குரியது.

இத்தகைய போக்கை பாரத ஸ்டேட் வங்கி உடனே கைவிட வேண்டும். இப்படியான குண்டர்படையை ஏவிவிட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் குண்டர்களை ஏவுதலை கைவிடாவிட்டால் மாணவர்களை ஒன்றுதிரட்டி தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

மூலக்கதை